Sunday, July 7, 2013

நினைவலைகள் : காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப்

இந்தியாவின் தனிச் சிறப்பு மிக்க அரசியல் தலைவர்களுள் ஒருவரான காயிதே மில்லத்
முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களின் 116 ஆவது பிறந்த நாள் இன்று அரசியல் சமூக அரங்கில் நினைவு கூரப்படுகிறது.
ஜூன் மாதம் 05 ம் நாள் 1896 ஆம் ஆண்டு நெல்லையில் பிறந்த இஸ்மாயில் சாஹேப் தமிழக அரசியல் வானில் சுடர் விட்டு ஒளிர்ந்த நட்சத்திரங்களுள் ஒருவராவார்.
அரசியல் சமூக வாழ்க்கையில் அப்பழுக்கற்ற தலைவராகத் திகழ்ந்த காயிதே மில்லத், முஸ்லிம் லீக் கட்சியின் தலைவராக இருந்த போதும் அனைத்து கட்சியினர் மற்றும் இனமக்களின் அபிமானத்தைப் பெற்றிருந்தார். மோசமான களம் எனப்படும் அரசியலில் முழு வீச்சோடு இருந்தும் கண்ணியவானாக விளங்கினார். அதனால் தான் கண்ணியத்துக்குரிய என்கிற அடைமொழியோடே இன்றும் அனைவராலும் நினைவு கூரப்படுகிறார்.
இந்திய நாட்டின் விடுதலைக்காக தனது படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு காந்திஜியின் தலைமையின் கீழ் ஒத்துழையாமை இயக்கம் கண்டவர் காயிதே மில்லத். திருச்சி ஜோசப் கல்லூரியில் பயின்ற காயிதேமில்லத், பிறகு சென்னை கிறிஸ்தவ கல்லூரியிலும் படித்து பி.ஏ. பட்டம் பெற 2 மாதம் இருந்தபோது, காந்திஜியின் அழைப்பை ஏற்று, காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டார். 1920-ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூலம் குதித்தார். அந்த ஆண்டில் திருநெல்வேலியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானத்தை பலத்த எதிர்ப்புகளுக்கு இடையே நிறைவேற்றிக் காட்டினார்.
அப்போதைய சென்னை ராஜதானி (மாகாண) சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் காயிதே மில்லத் பொறுப்புகள் வகித்தார். 1952-ம் ஆண்டு முதல் 58-ம் ஆண்டு வரை டெல்லி மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தார். 1962, 1967, 1971 தேர்தல்களில் நாடாளுமன்ற மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட காயிதேமில்லத், தொகுதிக்குச் செல்லாமலே வென்றவர் என்பது குறிக்கத்தக்கது.
இந்தியாவின் ஆட்சிமொழியாக இருக்க தமிழே அதிகத் தகுதிவாய்ந்தது என்று நாடாளுமன்றத்தில் காயிதேமில்லத் முழங்கினார். பாகிஸ்தான் பிரிவினைக்குப்பின்னர், 1947ல் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் பங்காக அளித்த சுமார் 17 இலட்ச ரூபாய் தொகையை காயிதேமில்லத் 'தேவையில்லை' என்று மறுத்தொதுக்கினார்.
தான் பணிபுரிந்த ஜமால்முஹம்மது நிறுவனத்திலேயே நிர்வாகப் பங்குதாரராக உயர்ந்த காயிதேமில்லத், தனது சொத்துக்களை சமுதாயத்திற்கு வாரிவழங்கிய வள்ளலாகவும் திகழ்ந்தார்.
அரசியல் நுணுக்கங்களை நன்கு அறிந்து, கொள்கையை விட்டுக்கொடுக்காமல், நெருக்கடிகளின்போதும் தளராமல், பொய்யான புகழுரை, பிம்பங்களுக்கு மயங்காமல் சமூக நலனுக்காகவே தம்மை அர்ப்பணித்த நல்ல அரசியல் தலைவரான காயிதே மில்லத், ஒழுக்க விழுமம் சார்ந்து அரசியல் களப்பணி செய்ய விரும்பும் இன்றைய அரசியல் இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாவார் என்றால் மிகையில்லை.
--இப்னு ஹம்துன்

0 comments:

Post a Comment